தேவை ஒரு தமிழ்த்தேசிய அறிவாயம்

அண்மையில் அண்ணன் ஆழி செந்தில்நாதன் அவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்த்தேசியத்திற்கு என்று  ஒரு அறிவாயத்தை (Think Tank) உருவாக்கவேண்டும் என்ற கனவினை என்னிடம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக அவருடனும் மேலும் சில நண்பர்களுடனும், குறிப்பாக செ. இரா. செல்வக்குமார், Sam Vijay, வித்தியாசகர், Hv. Vichu  [1] அவர்களுடன்  நேரடி சந்திப்பும் முகநூல் விவாதங்களும் நடந்தன.  இந்த கருத்தாடல்களின்  விளைவுதான் இக்கட்டுரை.

ஓர்  உயிரோ, அமைப்போ, அல்லது சமூகமோ பிழைக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய  அறிவியல்  பார்வை கடந்த சில பத்தாண்டுகளில் வெகுவாக  மாறிவிட்டது. வலியது வெல்லும் என்பதெல்லாம் தவறான பார்வை. தக்கது எஞ்சும் என்ற இடார்வினின் பார்வையே அறிவியலாளர்களால் வேறு விதமாகப் பார்க்கப்படுகிறது. தக்கது என்பது வலியது அல்ல, மாறாக   சூழலைப்பற்றிய சரியான தகவலைப் பெற்று தன்னை மாற்றி அமைத்துக்கொள்வதே   தக்கது. எந்த உயிரினம், அமைப்பு, அல்லது சமூகம் தனது சூழலுக்கான அறிவைப் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுகிறதோ, அதுவே பிழைக்கும்.

“In this evolutionary picture…we find survival as information processing. Our former belief in the survival of the fittest has been replaced by a belief in the survival of the best informed. Life itself goes beyond crude strength to knowledge. The human being is seen as information processor bound in a complex network with other human beings.” [2]

உயிர்கள் அனைத்தும்  தனது சூழலைப் பற்றிய அறிவைக்கொண்டே  இயங்குகின்றன [3]. இந்த அறிவு அதற்கு மரபணுக்கள் மூலம் வருகின்றன, சிந்தித்து வருவதல்ல. திடீரென சூழல் மாறும்பொழுது,  அவ்வுயிர்கள் மாறிய சூழலுக்கான அறிவு இல்லாததனாலேயே அழிகின்றன. ஒரு மனிதன் பிழைப்பதும் இதே போலத்தான். மனிதனின் சூழலைப் பற்றிய அறிவு கூடுதலாக கற்றல் மூலம் வருகிறது. அவ்வாறு நாம் கற்ற அறிவின்  அடிப்படையிலேயே இயங்குகிறோம். நாம் போட்டி போட்டு குழந்தைகளைக் கற்க வைப்பது,  நல்ல அறிவைக்கொடுத்து பிழைக்க வைப்பதற்குத்தான்.

இதே கருத்தை ஏற்கனவே  திருவள்ளுவர் இரு வரிகளில் கூறிவிட்டார் [4]:

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

பொருள்: அறிவு என்பது அழிவிலிருந்து காப்பாற்றும் ஆயுதம் ஆகும். பகைவர்களாலும் அழித்தல் இயலாத உள்ளிருந்து பாதுகாக்கும் அரண் ஆகும்

தமிழனம் பிழைக்கவேண்டுமானால் செழிக்கவேண்டுமானால் நமது சூழலைப் பற்றிய அறிவு அடிப்படையானது. இது இல்லாமல் என்ன செய்தாலும், அது குருட்டுத்தனமான செயல்பாடுதான். அது வெற்றிபெறும் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.

இன்று நாம் ஈழத்திலும் தமிழகத்திலும் பல்வேறு அழிவுகளை எதிர்கொண்டு வருகிறோம். அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இன்று பெரும்பாலானோர் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் ஆயுதம். அதற்கேற்ப பல்வேறு அரசியல் அமைப்புகள் இயங்குகினறன, ஆனால் வள்ளுவர் கூறிய “அற்றம் காக்கும்” அறிவைத் தேடுவதற்கான அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. அவற்றிற்கான தேவை உணரப்பட்டுள்ளதா என்பதும் ஐயமே. இக்கட்டுரையில்   அத்தேவையை  உணர்த்தி, நாம் செயல்படவேண்டிய ஒரு திட்டத்தையும் முன்வைப்பதுதான் எனது நோக்கம்.

இன்றைய நமது  செயற்பாடுகள் மிக எளிமையான பார்வையில் இருக்கின்றன. சூழலின் சிக்கல்களைப் பற்றிய  முழு அறிவின்படி நமது செயல்பாடுகள் இல்லை. அறிவு என்பது வெறுமனே பார்த்து அறிவதல்ல. நாம் பார்த்து உண்மையை உணர்வதில்லை, மாறாக தத்துவங்களின் வழியாகவே பார்க்கிறோம் என்கிறார் பாப்பர் [5].. புதிய தத்துவங்களை கடினமான உழைப்பினால்தான் பெற முடியும். அதனால்தான் அறிவியலாளர்கள் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடினமான அறிவைத் திரட்டி, அறிவுத்தேவையைப் பூர்த்தி செய்வதுதான் நாம் உருவாக்க நினைக்கும் அறிவாயத்தின் முக்கிய கடமை.

அறிவை வளர்ப்பதற்கு தனித்த அமைப்புகள் தேவை. ஏற்கனவே வேறு காரணங்களுக்காக இருக்கும் அமைப்புகளால் அறிவு முன்னேற்றத்தை உருவாக்குவது முடியாது அல்லது மிகக்கடினமானது என்கிறார் சாபி பாகால் [6]. இது இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் அமைப்புகளுக்கும் பொருந்தும். அரசியல் செய்யும் அமைப்புகளால் சிறந்த வெற்றிக்கான அறிவை உருவாக்க முடியாது அல்லது மிகக்கடினமானது.

உதாரணாமாக ஆங்கிலம் ஏன் உலகப்பொதுமொழி ஆனது என்று கேட்டால் என்ன கூறுவீர்கள்?  ஆங்கிலேயர்கள் உலகை ஆண்டதனால் ஆங்கிலம் பொதுமொழியானது என்று பொதுவான பதில் வரும். ஏன் அவர்களால் ஆள முடிந்தது, மற்றவர்களால் முடியவில்லை? ஏன் வேறு எந்த ஐரோப்பிய நாடும் ஆங்கிலேயர்களைப் போல கோலோச்ச முடியவில்லை?  இதை ஆழமாக ஆராய்ந்த சாபி பாகால் (Safi Bahcall) [6] கூறும் காரணம் என்னவெனில், ஆங்கிலேயர்கள் அறிவியல் புரட்சியில் மற்றவர்கள் அனைவரையும் விட முன்னோடியாக இருந்தார்கள். அதற்கு அடிப்படைக் காரணம், அறிவியலை வளர்ப்பதற்கென்று  தனியான “இராயல் சொசைட்டி” (Royal Society) என்ற அமைப்பை உருவாக்கி அறிவியலை வளர்த்தார்கள். அந்த  அமைப்பில்தான் நியூட்டன்   உறுப்பினராகி  இயக்கவிதிகளை கண்டறிந்து நவீன அறிவியல் புரட்சியை உருவாக்கினார். இன்று நாம் ஆங்கிலம் படிப்பதற்கு   இந்த இராயல் சொசைட்டி தான் காரணம். இதுதான் அறிவின் ஆற்றல் என்பது.

இன்னொரு உதாரணம் அமெரிக்கா. ஏன் அமெரிக்கா வல்லரசானது?  இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்றதனால் ஆனது எனலாம். ஆனால் எது வெற்றிபெற வைத்தது? செர்மனி மற்ற நாடுகளைவிட  இராணுவ நுட்பத்தில்  முன்னோடியாக இருந்தார்கள். அவர்கள் மின்னல் வேகத்தில் ஐரோப்பிய நாடுகளை விழுங்கி வந்தார்கள். அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு செல்லும் சரக்குக் கப்பல்களை எல்லாம் அவர்களின் நீர்மூழ்கிகள் மூலம் நிர்மூலம் செய்தார்கள். இங்கிலாந்து உணவிற்கே திண்டாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அமேரிக்கா போரில் இறங்கவில்லை. ஆனால் போர்மேகங்கள் அதனை சூழ ஆரம்பித்தன. அப்பொழுது வானவர் புஷ் (Vannevar Bush) என்ற MIT பேராசிரியர், அமெரிக்கப் படைகள் செர்மனியை ஒப்பிடும்பொழுது  இராணுவ  நுட்பத்தில் பின்தங்கி இருப்பதை உணர்ந்து, தனது  வேலையை உதறிவிட்டு  ஜனாதிபதியை சந்தித்து இராணுவ ஆராய்ச்சிக்கென்று தனி அமைப்பை உருவாக்கவேண்டும் என்று பத்து நிமிடம் சந்தித்து பேசுகிறார். ஜனாதிபதி அப்பொழுதே  கையெழுத்திட்டு OSRD என்ற தனி  அமைப்பை உருவாக்குகிறார். முடிவில் அந்த அமைப்பு உருவாக்கிய நுட்பங்களை வைத்தே அமேரிக்கா செர்மனியை வீழ்த்தியது. குறிப்பாக OSRD கண்டுபிடித்த ரேடார் நுட்பம், செர்மனியின்  நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்க உதவியது. அதன்மூலம் அட்லாண்ட்டிக் பெருக்கடலில் செர்மனியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. OSRD  இல்லாமல் அமெரிக்க வென்றிருக்குமா என்பது பெரும் ஐயமே [6].  இராணுவ அறிவியல் நுட்பங்களில் வெல்லாமல், பெரும்படை மட்டும்கொண்டு வெல்ல முடியாது. வெற்றிக்கு படைகளும்  தேவை, அறிவியல் நுட்பங்களும் தேவை என்பதை உணர்ந்து சர்ச்சில் இவ்வாறு கூறுகிறார்:

“Had the technology war been lost, all the bravery and sacrifices of the people would have been in vain.” – Winston Churchill

இக்கருத்து இன்றைய நமது சூழலுக்கும் பொருந்தும். அரசியல் சமூக செயல்பாடுகள் மிகமுக்கியமானது. இது இராணுவப்படைகள் போன்றவை. ஆனால் அவை மட்டும் நமக்கு வெற்றியை ஈட்டித்தர போதுமானது அல்ல. நாம் அறிவுப்பூர்வமான செயல்பாடுகளில் எதிரிகளை வெல்வது முக்கியமானது. அதற்கு அவ்வறிவை உருவாக்குவதற்கென்று தனி அமைப்புத் தேவையானது. OSRD செயல்பட 1-2% நிதியே தேவைப்பட்டது, ஆனால் அது போரின் திசையைத் தீர்மானித்தது.  அதுபோல ஒரு சிறிய அறிவார்ந்த குழு, தமிழ்த்தேசியத்தின் வெற்றிக்கான திசையை தீர்மானிக்க முடியும் என்பதை உணரவேண்டும்.

உலகம் இருண்ட காலத்திலிருந்து வெளிவந்து இன்று நாம் காணும் நவீன உலகு  உருவாவதற்கு ஒரு காரணம்  பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய அறிவொளிக்கால தத்துவமேதைகள் [7] உருவாக்கிய அறிவுதான். அதேபோல இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகிய வியன்னா வட்டத்தில்[8] பங்குபெற்ற மேதைகள் உருவாக்கிய தத்துவங்கள் இன்று பாரிய தாக்கத்தை உருவாக்கி வருகின்றன.  ஏன், இன்று தமிழ்த்தேசியம் / திராவிடம் தமிழகத்தில் நிலைப்பதற்கு அன்று உழைத்த அறிவிற்சிறந்த அறிஞர்களேக் காரணம் [9]. மனிதனின் முன்னேற்றம் என்பது அவன் பெரும் அறிவைப்பொறுத்தே அமைகிறது. இன்றைய உலகின் அசுரவேக மாற்றத்திற்கும் அதுவே அடிப்படையாகவே இருக்கிறது. இராணுவமோ, அரசியலோ, சமூகமோ  வெற்றியைத் தீர்மானிப்பது அறிவுதான். அறிவுதான் அற்றம் காக்கும் கருவி.  ஏன், நாம் செல்லும் திசையைத்தீர்மானிப்பதே அறிவுதான்.

இன்று நாம் காணும் சிக்கல்கள் ஏராளம். அவற்றைத் தீர்ப்பதற்கு அடிப்படையாக இருக்கப்போவது அறிவு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வாறான அறிவை உருவாக்குவதற்கு தனிப்பட்ட அமைப்பு தேவை. இனி அவ்வாறான அமைப்பை எப்படி உருவாக்குவது என்று பாப்போம். ஒரு அறிவாயத்தை உருவாக்குவதில் இரு அடிப்படைத் தேவைகள் உள்ளன:

 1. சிந்தனையாளர்கள்: சமூகம் என்பது சிக்கலான அமைப்பு. அதனைப் புரிந்துகொள்ள பல்வேறு துறைகளில் அறிவுள்ளவர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களைத் திரட்டவேண்டும், தேவையான பயிற்சிகள் அளிக்கவேண்டும்.
 2. நிதி: ஒரு அமைப்பை நடத்துவதற்கான பொருளாதாரம் உருவாக்கப்படவேண்டும்.

இவ்விரண்டு தேவைகளையும் உடனடியாகப் பூர்த்தி செய்யமுடியாது. இதைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். அதனால் கீழ்வரும் வழியில் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

 1. அறிவைத் திரட்டுவதற்கென்று ஒரு தனி இணையதளத்தை ஆரம்பிக்கவேண்டும்.  இன்றைய உலகில் பெரிய சிக்கல் என்னவென்றால்  தகவல் என்பது ஒரு பெருவெள்ளமாக (information flood) ஓடுகிறது [10]. இதில் தேவையானது என்ன என்று தெரியாமல் தேவையற்ற செய்திகளில்/கூச்சல்களில் சிக்கிக்கொள்கிறோம். இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம் என்பது  தேவையான அறிவினைத் தேடி ஆராய்ந்து திரட்டவதுதான்.
 1. அவ்வாறான அறிவு ஆராய்ச்சி கட்டுரைகளாக, நூல் விமர்சனங்களாக, முக்கிய ஆங்கிலக் கட்டுரைகளின் சுருக்கமாக, அல்லது வேறு எந்த முக்கியமான படைப்புகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் தரவுகளுடன் தெளிவாக ஆராயப்பட்டிருக்கவேண்டும்.
 1. ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இது ஒரு தட்டையான (flat organization)  இலாப நோக்கமற்ற அமைப்பாக இருக்கும். இது ஒருவர் சொற்படி கேட்கும் சர்வாதிகாரமும் அல்ல, பொது ஓட்டு  எடுத்து   முடிவெடுக்கும் சனநாயகமும் அல்ல [16]. இதன் குறிக்கோள் சிறந்த அறிவை உருவாக்குவது மட்டுமே. அது யாரிடம் இருந்தும் வரலாம். அனைத்து கருத்துக்களும் கேள்விக்குள்ளாக்கப்படும். “எனது  கருத்துதான் சரி” என்ற எண்ணத்தில் செயல்படாமல், நமது கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்ற ஐயத்துடனேயே அணுகவேண்டும். அனைவரையும் மதித்துப் போற்றும் பண்பு கொண்டிருக்கவேண்டும். கருத்துக்கள் மீதான கேள்விகளை, அவமதிப்பாக எடுத்துக்கொள்ளாமல்  அதை கற்றலுக்கு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
 1. அறிவு என்பது கூட்டிக்கொண்டே செல்வதல்ல, தவறானவற்றைக் கழித்திலும் ஆகும். புரட்சிகரமான புதிய கருத்துக்கள் பழையவற்றை தவறாக்கியே வருகிறது. பொதுவாக அதுபோன்ற புதிய கருத்துக்கள் வரவேற்கப்படுவதில்லை, மாறாக கூறியவர்கள் தாக்கப்படுகிறார்கள். உதாரணமாக கலிலியோவை எடுத்துக்கொள்ளலாம். மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை. அதுபோன்ற மனநிலைதான் நமது முன்னேற்றத்திற்கு இருக்கும் பெரிய தடங்கல். புதிய கருத்துக்களை உளவாங்கி சீர்படுத்தி அதை பரப்புவது இந்த இணையதளத்தின் ஒரு முக்கிய செயல்பாடாக இருக்கும். அதுபோன்ற கருத்துக்களில்தான் நமது வெற்றியே தங்கி இருக்கிறது. அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையமான DARPA, புதிய திட்டங்களுக்கு என சில கேள்விகளை முன்வைக்கிறது [11]. அதிலிருந்து சில முக்கிய கேள்விகளுக்கான விடைகளுடன் ஒவ்வொரு படைப்பின் முன்னுரையும் ஆரம்பிக்கலாம் :
 • எளிமையான தமிழில் புதிய கருத்தை சில வரிகளில் விளக்கவும்
 • இன்று நிலவும் கருத்துக்கள் என்ன? உங்கள் புதிய கருத்து இதிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது?
 • இப்புதிய கருத்துக்களினால் யாருக்கு என்ன பயன்? இவற்றைக்கொண்டு எது மாதிரியான மாற்றங்களை உருவாக்க முடியும்?
 1. நமது சிந்தனைகள் அனைத்தும் மாதிரிகளின் (models) மூலமே வருகிறது.  நமது மூளையில்  இவ்வுலகு எவ்வாறு இயங்குகிறது என்ற ஒரு மாதிரி (நாம் உணராவிட்டாலும்) இருக்கிறது. இம்மாதிரியின் மூலமே நாம் சிந்திக்கிறோம். ஆனால் சிக்கல் என்னவென்றால் அதுமாதிரியான வெளியே கூறப்படாத மாதிரிகளின் மூலம் எடுக்கப்படும் முடிவுகளினால்தான் பெரிய தவறுகள் ஏற்படுகின்றன [12].

Many bad decisions are due to unarticulated models of the world  – Roger Martin

மாதிரிகளை வெளிப்படையாக்கினால், அதனை அனைவரும்  ஆராய்ந்து  சோதனை செய்து, சீர்படுத்தி சிறப்பாக்க முடியும். அவ்வாறு சிறந்த மாதிரிகளைக் கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் சிறப்பானதாக அமையும். அவ்வாறான மாதிரிகளை உருவாக்குவதை   ஒரு முக்கிய கடமையாகக்கொண்டு  இந்த இணையதளம் செயல்படவேண்டும்.

 1. சமூகம் போன்ற சிக்கலான அமைப்புகளை அலசுவதற்கு பல்வேறு துறைகளின் புரிதல் தேவைப்படுகிறது என்பதால், இதை ஒரு கூட்டு முயற்சியின் மூலமே வெற்றிபெற வைக்கமுடியும் [14,15]. இதில் பங்குபெற அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சி, தனி முயற்சி அல்ல. அனைவரும் ஒத்த கருத்துக்களுடன் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. எவ்வளவு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதோ அவ்வளவுதூரம் நல்லது. கருத்துக்களில் வேற்றுமை இருக்கவேண்டும், அதன் மூலமே நாம் உண்மையை அறிய முடியும் [13]. உங்களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருக்கிறதென்றால், நீங்கள்தான் மிக முக்கியம்.  ஆனால் அதே நேரம் தமிழர் நலன் என்ற  குறிக்கோளில் அனைவரும்  உணர்வுப்     பூர்வமாக ஒரு  மனதுடன் இருக்கவேண்டும்.
 1. இதை ஓர் உலகத்தமிழர்களின் கூட்டு முயற்சியாக ஆக்கவேண்டும். இது எந்த ஓர் அரசியல் அமைப்பின் கீழும் இயங்காது. அவ்வாறு சுதந்திரமாக இயங்குவதன் மூலமே சிறந்த அறிவை உருவாக்க முடியும். உலகில்   இருக்கும் தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் இணைந்து செயல்படும் ஒரு தளமாக இதை உருவாக்கவேண்டும்.  அவ்வாறான சிந்தனையாளர்கள் வேறு அமைப்புகளிலும் இருக்கலாம்.
 1. நாம் தேசிய சிந்தனை கொண்டவர்களாக இருக்கும் அதே வேளையில் மனிதநேயம் கொண்டவர்களாக இருத்தல்வேண்டும். வெறுப்புக் கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது.

இது ஒரு ஆரம்பகட்ட திட்டமே. விவாதங்களின் மூலம் எவ்வாறு செயல்படுவது, செயல்படும்   விதிமுறைகள் ஆகியன கண்டறியப்படும். அனைத்தும் விவாதத்திற்கு உட்பட்டதே.

தற்பொழுது  arivukkadal.com என்ற தளம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தளத்தை வடிவமைத்து  கட்டுரைகள் ஒவ்வொன்றாக  பதிப்பிக்க வேண்டும்.

இதுதான் ஒருஅறிவாயத்தின் ஆரம்பத்திற்கான திட்டம். இதிலிருந்து சிந்தனையாளர்களை திரட்டி படிப்படியாக ஒரு அறிவாயமாக வளரவேண்டும். இன்று நாம் எதிநோக்கும் சிக்கல்கள் கடினமானவை. ஆனால் அடிப்படையில் சிக்கல்கள் அனைத்தும்  அறிவுச்சிக்கல்களே. அவற்றை தீர்ப்பது  எவ்வாறு  என்று அறிந்து விட்டால், தீர்ப்பது எளிதாகிவிடும். அவ்வாறான அறிவைப் பெறுவது சிந்தனையாளர்களின் வரலாற்றுக் கடமை. அதற்கான வாய்ப்பாக இம்முயற்சி இருக்கும்.

 1. ஆழி செந்தில்நாதன், செ. இரா. செல்வக்குமார், Sam Vijay, வித்தியாசகர், Hv. Vichu, ஆகியோரது கருத்துக்கள் மிகவும் உதவியாக இருந்தது.
 2. Coker, Christopher. The Future of war
 3. Plotkin, Henry C. Darwin machines and the nature of knowledge. Harvard University Press, 1997.
 4. இக்குறளை முதன் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஐயா செ. இரா. செல்வகுமார் அவர்கள்.  பின்பு ஆழி செந்திலநாதன் அவர்கள் விவாதத்தின்போது இக்குறளை என்னிடம் கூறினார்கள். அதன்பின் எனக்கு இக்குறள் திருக்குறளிலேயே மிகவும் பிடித்த குறளாக மாறிப்போனது.
 5. Popper, Karl. All life is problem solving. Routledge, 2013.
 6. Safi Bahcall, Loonshots How to Nurture the Crazy Ideas That Win Wars, Cure Diseases, and Transform Industries, 2019
 7. Russell, Bertrand. History of western philosophy.
 8. Vienna Circle, https://en.wikipedia.org/wiki/Vienna_Circle
 9. Vaithees, V. Ravi. Religion, Caste, and Nation in South India: Maraimalai Adigal, the Neo-Saivite Movement, and Tamil Nationalism, 1876-1950. Oxford University Press, 2015.
 10. Gleick, James. The information: A history, a theory, a flood. Vintage, 2012.
 11. The Heilmeir Catechism, https://www.darpa.mil/work-with-us/heilmeier-catechism
 12. Riel, Jennifer, and Roger L. Martin. Creating great choices: A leader’s guide to integrative thinking. Harvard Business Press, 2017.
 13. Page, Scott E. The Difference: How the Power of Diversity Creates Better Groups, Firms, Schools, and Societies-New Edition. Princeton University Press, 2008.
 14. Meadows, Donella H. Thinking in systems: A primer. chelsea green publishing, 2008.
 15. Stroh, David Peter. Systems thinking for social change: A practical guide to solving complex problems, avoiding unintended consequences, and achieving lasting results. Chelsea Green Publishing, 2015.
 16. Ray Dalio, Principles: Life and Work, 2017.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s