குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு

பல நூற்றாண்டுகளாக பொதுவாக  ஓர் அமைப்பின் செயல்பாடு என்பது  தலைவர், துணைத்தலைவர்கள், தொகுதித்தலைவர்கள், அடிமட்ட  உறுப்பினர்கள் என  பல அடுக்குகளைக் கொண்டு செயல்படும்.  திட்டமிடல் கட்டளைகள் ஆகியன தலைமையால் மேற்கொள்ளப்பட்டு, கீழே அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு, அடிமட்ட உறுப்பினர்களால்    செயல்படுத்தப்படும். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக  இது கேள்விக்குட்படுத்தப்பட்டு  பல முன்னணி அமைப்புகளின் செயல்பாடுகள்  தலை கீழாக மாற்றப்பட்டு   ஒரு “குழுக்களின் குழு” என்ற ஒரு புதிய முறை பயனுக்கு வர ஆரம்பித்துள்ளது.  இம்முறையில் ஓர் அமைப்பின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். ஒரு சிறு குழுவால் பன்மடங்கு பலம்வாய்ந்த எதிரிகளை எதிர்த்து வெற்றிகொள்ள முடியும். இம்முறையை அமேரிக்கா,  இங்கிலாந்து,  புலிகள், இந்துத்வா  ஆகியோரின் வரலாற்றிலிருந்து சில உதாரணங்களுடன் விளக்கி, அதே  முறையே இன்றுள்ள நமது சிக்கல்களைத் தீர்க்க எவ்வாறு பயன்படுத்தக்கலாம் என்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

அமெரிக்க – அல்கொய்தாப் போர்:

ஈராக்கில் சாதம் குசைன்   நீக்கப்பட்டபின் அமெரிக்கப் படைகள் அல்கொய்தாப் படைகளை 2004-இல் எதிர்கொண்டது.  பல மடங்கு ஆட்பலமும் ஆயுதபலமும் கொண்ட உலகின் தலைசிறந்த அமெரிக்கப்படைகள், எந்த பெரிய பயிற்சியோ ஆயுத பலமோ  அற்ற அல்கொய்தா குழுவிடம் திணறிக்கொண்டிருந்தது. அல்கொய்தாவின் தாக்குதல்கள் கூடிக்கொண்டே சென்றதே ஒழிய குறையவில்லை. பொதுவாக ஒரு இயக்கத்தின் உயர்நிலை தளபதிகளை  அழித்தால்  இயக்கம் நொறுங்கிவிடும், ஆனால் அல்கொய்தாவிடம் அது எடுபடவில்லை.  இதற்கு ஒரு தீர்வுகாண  அமெரிக்கப்படைகளின் ஈராக் கட்டளைத்தளபத்தி மெக்கிறிசுடல், தனது படைகளின் செயல்படும் விதத்தை ஆராய்ந்தார். படைகளுக்கு இடப்படும் உத்திகளிலோ, கட்டளைகளிலோ, ஆயுதங்களிலோ, அல்லது படைவீரர்களின் திறமையிலோ எந்த குறைபாடுகளும் இல்லை. அனைத்தும் சரியாகவே இருந்தது, ஆனாலும் தோற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஆழமாக ஆராய்ந்தபின் அவர் கண்டறிந்தது என்னவென்றால், அமெரிக்கப்படைகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ அதுதான் சிக்கலே. பல நூற்றாண்டுகளாக பெரிய இராணுவங்கள் தோன்றிய காலத்திலிருந்து, தளபதி ஒரு தாக்குதலை திட்டமிட்டு கட்டளையிடுவார், அதைக் கீழிருந்த படைவீரர்கள் செய்து முடிப்பார்கள். இத்தனை நூற்றாண்டுகளாக வெற்றிகரமாக பின்பற்றப்பட்ட முறை இப்பொழுது வேலை செய்யவில்லை. அதற்கு காரணமாக அவர் கண்டறிந்தது என்னவென்றால், அல்கொய்தா படைகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, அக்குழுக்கள் தாமாக திட்டமிட்டு வாய்ப்புள்ள இலக்குகளை வீழ்த்திவிட்டு, அமைதியாகி விடுவார்கள். அடுத்த தாக்குதல் இன்னொரு குழுவால் இன்னொரு இடத்தில் நடக்கும். எது எப்பொழுது நடக்கும், எங்கே நடக்கும், யாரால் நடக்கும் என்று அமெரிக்கப்படைகளுக்கு தெரியாமல் கடும் குழப்பநிலையில் இருந்தார்கள். அமெரிக்கப்படைகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் முன் அல்கொய்தாப்படைகள் வேறு இடத்திற்கு நகர்ந்திருக்கும்.

இது எப்படி என்றால் ஒரு உதைபந்தாட்டத்தை  எடுத்துக்கொள்வோம். இதில் ஒரு அணியில் உள்ள ஆட்டக்காரர்கள்  மொத்த மைதானத்தையும் கவனிக்கிறார்கள். அவ்வணியில் உள்ள மற்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள், பந்து எங்கே இருக்கிறது  என்று கவனித்து அதற்குத்தகுந்தபடி தாங்களாகவே எங்கே நகரவேண்டும் என்று நகருகிறார்கள்.  இன்னொரு அணியில் உள்ள ஆட்டக்காரர்களுக்கு மொத்த மைதானமும் தெரியாது,  ஒவ்வொரு வீரரும் எங்கே போகவேண்டும் என்ன ஆடவேண்டும் என்று தொடர்ந்து பயிற்சியாளரின்  நேரடி கட்டளைப்படி நகர்வுகளை மேற்கொள்வார். இவ்வாறு நடந்தால் என்னவாகும்? இரண்டாவது அணி மிக மெதுவாக நகரும், முதல் அணி இரண்டாம் அணி உருவாக்கும் ஓட்டைகளின்  நடுவாக புகுந்து இலக்கை அடைந்து வெற்றி பெறுகிறார்கள். இரண்டாம் அணி வீரர்கள் எவ்வளவுதான் திறமைசாலியாக உடல்வலு மிக்க, சிறந்த ஓடக்கூடிய  வீரர்களாக இருந்தாலும், முழு மைதானமும் தெரியாமல்  பயிற்சியாளர் இடும் கட்டளைக்கு காத்து நிற்பதால் தோற்பார்கள். இரண்டாம் அணி எந்த ஒரு பெரிய பயிற்சி இல்லாவிட்டாலும், திறமை இல்லாவிட்டாலும் வெற்றி பெறுவார்கள். இதுதான் அமெரிக்கப்படைகள் தோற்றுக்கொண்டிருப்பதற்குக் காரணம் என்று மெக்கிறிசுடல் கண்டறிந்தார்.

அமெரிக்கப்படைகள் அல்கொய்தாவை வெல்லவேண்டுமானால், தங்கள் பெருமையை விட்டுவிட்டு அல்கொய்தாவிடம் இருந்து கற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுக்கு வருகிறார். அதன் விளைவாக அமெரிக்கப்படைகளை சிறுசிறு குழுக்களாக, வேகமாக இயங்கி தானாக முடிவெடுக்கும் அதிகாரத்தை அளிக்கிறார். ஒரு மாதத்திற்கு 18 தாக்குதல்கள் என்று மேற்கொண்டு வந்த அமெரிக்கப்படைகள், மறுசீரமைப்பிற்குப்  பின் மாதத்திற்கு 300 தாக்குதல்களை மேற்கொள்ள  முடிந்ததது.அது மட்டுமின்றி, தாக்குதல்களின் வெற்றி  விகிதமும் கூடியது.  இதன் பின்னரே ஈராக்கில் அல்கொய்தாவை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.  இத்தனைக்கும் அமெரிக்கப்படைகள் பெரிதாக ஆட்பலத்தையோ, ஆயுத பலத்தையோ கூட்டவில்லை.  மறு  சீரமைப்பு மட்டுமே அவர்களின் பலத்தை 17 மடங்கு கூட்டி இருக்கிறது. மெக்கிறிசுடல் தான் கற்றுக்கொண்ட பாடத்தை குழுக்களின் குழு (Team of Teams) என்று நூலாக எழுதியிருக்கிறார் [1]. அதிலிருந்து வரும் கருத்துக்களை அடிப்படையாகக்  கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஏன் இந்த  தீடீர் மாற்றம் என்றால், நவீன தகவல் தொழில்நுட்பம், இணையம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட  பிணைப்புகள் ( fast communication and  interconnectedness)  போன்றவை மாற்றங்களை வெகுவேகமாகக் கொண்டுவருகிறது. இம்மாற்றங்கள் போரில் மட்டுமல்ல, சமூகத்தில் அனைத்து துறைகளிலும் அதிவேக மாற்றங்களைக் அதிக அளவில் கொண்டுவருகின்றன. இம்மாற்றங்களை ஒரு தலைமையால் அனைத்தும் புரிந்து திட்டமிடுவது சாத்தியமற்றது என்றாகிவிடுகிறது. அவர்கள் திட்டமிடுவதற்குள் களநிலவரமே மாறிப்போகும். இதுபோன்ற நிலைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பல குழுக்களின் கூட்டாக உள்ள குழுவே வெற்றி பெரும்.

குழுக்களின் குழு தத்துவம்:

மெக்கிரிசுட்டல் தனது அனுபவத்தில் குழுக்களின் குழுவை எவ்வாறு உருவாக்குவது என்று முறை வகுத்திருக்கிறார். அதை விளக்கமாக பார்ப்போம்:

 1. ஒரு குழு என்பது நெருக்கமான நட்பினால் நம்பிக்கையினால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் உங்கள் கல்லூரியில் படிக்கும்பொழுது உருவாக்கிய நட்புகளை எண்ணிப் பாருங்கள். அதுபோன்ற இறுக்கமான குழுக்களை உருவாக்கவேண்டும். ஒரு குழுவில் ஐந்திலிருந்து நூறுபேர் வரை இருக்கலாம். அதற்குமேல் இருந்தால்  நெருக்கமான குழுவை உருவாக்க முடியாது.  நம்பிக்கை என்பது உடனடியாக ஏற்படுவது அல்ல. தொடர்ந்து  ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலமும், நேரடித் தொடர்புகள் மூலமும் மெதுவாக ஏற்படுவது.
 1. இவ்வாறு உருவாக்கிய குழுக்களை எல்லாம் இணைத்து ஒரு குழுக்களின் குழுவை (Team of Teams) உருவாக்கவேண்டும். எவ்வாறு ஒரு குழுவில் உள்ளவர்கள் நெருக்கமாக இருக்கிறார்களோ, அதுபோல குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து நெருக்கமாக இருக்கவேண்டும். இதற்கு குழுக்கள் இருப்பதிலேயே சிறந்த சில உறுப்பினர்களை மற்ற குழுக்களுக்கு அனுப்பி அவ்வுறுப்பினர்கள் அக்குழுவில் துணைபுரிந்து நம்பிக்கை வளர்க்கவேண்டும்.
 1. குழுக்கள் தனித்து அவர்களின் கடமைக்குத் தேவையானது மட்டும் போதும் என்று குறுகிய பார்வை கொண்டிருக்கக்கூடாது. மாறாக அனைத்து குழுக்களுக்கும் களத்தின் மொத்த நிலவரம் தெரியவேண்டும். இது அனைவரையும் இணைத்து ஒரே பொது  உணர்வை (shared consciousness) அளிக்கும், பொதுவான இலக்கை (common purpose) நோக்கி செயல்படுத்த வைக்கும்.
 1. ஒவ்வொரு குழுவிற்கும் முடிவெடுத்து செயல்படும் அதிகாரம் அளிக்கப்படவேண்டும் (Empowered execution). அவர்கள் தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு குழுவும் எங்கெங்கே வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூர்ந்து  கவனிக்கவேண்டும்.   வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். மற்ற குழுக்களின் உதவி தேவைப்படும் எனில் அவர்களை நாடி உதவி பெறவேண்டும். மேலும் மற்ற குழுக்களின் செயல்பாடுகளையும் கவனிக்கவேண்டும். உங்களால் உதவ முடிந்தால் உதவவேண்டும்.

குழுக்களுக்கு அதிகாரம் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல. செயல்பாட்டுக்கு சில பொதுவான விதிமுறைகளை அளிக்கலாம். உதாரணமாக, “நமக்கு நன்மை கொடுக்கும், ஆனால் சட்டத்தை மீறாத எந்த காரியங்களையும் செய்யலாம்” என்று பொதுவான விதிமுறை வகுக்கலாம்.

இங்கே முடிவெடுக்கும் அதிகாரம் குழுக்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டால், தலைமைக்கு என்ன வேலை,  தலைமை தேவையா இல்லையா என்ற கேள்விகள் எழும். இங்கே தலைமையின் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறையப்போவதில்லை. தலைமை முன்பைவிட மிகமுக்கியம், ஆனால் அதன் கடமைகள் வேறு:

 1. தலைமையின் வேலை என்பது ஒரு தோட்டக்காரர் போன்றது. தோட்டக்காரர் எதையும் உற்பத்தி செய்வதில்லை, செடிகள்தான் உற்பத்தி செய்கின்றன. அவரின் வேலை எல்லாம்  நிலத்தை பராமரித்தல், செடிகளுக்கு உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் போன்ற வேலைகள்தான். மொத்தத்தில் செடிகள் வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுக்க எது மாதிரியான சூழலை உருவாக்கவேண்டுமோ, அதை உருவாக்குவதுதான் அவர் வேலை.

“It requires a gardener, a leader displaying the willingness to accept great responsibility remains central to making an ecosystem viable.” [1]

 1. ஒரு இயக்கத்தில் அந்த சூழல் என்பது ஒத்துழைப்பான வெற்றிக்குத்தேவையான ஒரு  பண்பாட்டை  உருவாக்குவதுதான்.  தலைவர் காய்களை நகர்த்துவதை  விட்டுவிட்டு சூழலை வடிவமைக்கவேண்டும்

“The role of the senior leader is no longer that of controlling puppet master, but rather that of an empathetic crafter of culture… Leaders need to shift focus from moving pieces on the board to shaping the ecosystem.” [1]

 1. குழுக்கள் முடிவெடுத்து செயல்படும்பொழுது, நடுவில் குறுக்கிடக்கூடாது. அவர்களை நம்பவேண்டும். களத்தில் நிற்கும் அவர்களுக்குத்தான் அங்கெ இருக்கும் நிலவரம் தெரியும், அவர்களால்தான் சிறந்த முடிவெடுக்க முடியும் என்று ஒதுங்கி இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்.
 1. தொடர்ந்து அமைப்பை கண்காணித்து களைகளை எடுத்து அமைப்பை சீர் செய்து கொண்டே இருக்கவேண்டும். அதே நேரம் .தலைமை திறந்த வெளியாக இருக்கவேண்டும். மற்றவர்கள் அவரை கண்காணிக்க அனுமதிக்கவேண்டும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படவேண்டும்.
 1. ஒரு வலைப்பின்னலை தோற்கடிக்க இன்னொரு வலைப்பின்னலால் மட்டுமே முடியும் என்றுணர்ந்து செயல்படவேண்டும். குழுக்களிடையே தேவையான புதிய இணைப்புகளை உருவாக்கவேண்டும், தேவையற்ற இணைப்புகளை நீக்கவேண்டும். மாறும் சூழலுக்கு ஏற்ப அமைப்பின் வலைப்பின்னலை (Shape the network) தொடர்ந்து வடிவமைக்கவேண்டும்.

“It takes a network to defeat a network.” [1]

 1. தகவல்களை மறைத்து வைக்காமல், அமைப்பில் உள்ள அனைவரும் பார்க்கும்படி பொதுவில் வைக்கவேண்டும். அனைத்து குழுக்களையும் அவ்வாறு செய்யும்படி வழிசெய்யவேண்டும். அவ்வாறு செய்தால் தகவல் கசிந்துவிடும் என்று பயப்படக்கூடாது. வேகமாக மாறும் உலகில் கசியும் தகவல்களால்  ஏற்படும் பாதிப்பை விட, பகிரப்பட்ட தகவல்களால் ஏற்படும் நன்மை அதிகம் என்று உணரவேண்டும்.  அப்பொழுதுதான் அனைவருக்கும் களத்தின்  முழுநிலவரம் தெரியும். அதன்படி சிறந்த முடிவுகளை எட்ட முடியும் என்கிறார் மெக்கிரிசுட்டல். இது அமைப்புகளையும்  சூழலையும் பொறுத்து மாறுபடும். தகவல் பரவலால் ஏற்படும் நன்மைகளையும், கசிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
 1. தலைவர்களின் பேச்சும் செயலும் ஒத்திருக்கவேண்டும். பேச்சொன்று செயலொன்று என்றிருந்தால், குழப்பம் ஏற்படும். உறுப்பினர்கள் பொதுவாக பேச்சைவிட தலைவரின் செயலிலிருந்தே அதிகம் புரிந்து கொள்வார்கள்.
 1. அனைவருக்கும் ஒட்டுமொத்த களநிலவரம் தெரிய வழி செய்யவேண்டும். அவ்வாறில்லாவிட்டால், அதிகாரம் கொண்ட குழுக்களால் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டு  பாரிய பின்னடைவுகள் ஏற்படும். ஒட்டுமொத்த களநிலவரமும், பரவலாக்கப்பட்ட  அதிகாரமும் இணைந்து செயல்படும்பொழுதே வெற்றி கிட்டும்.

இவ்வாறு செயல்பாடு ஓர் இயக்கம் பின்வரும் பண்புகளைப் பெற்றிருக்கும்:

 1. இயக்கம் மிகவேகமாக செயல்படும். அதன் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும்.
 1. இயக்கம் ஓர் எந்திரம் போன்று செயல்படாது, மாறாக ஒரு உயிர் போன்று மாறும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து எதிரியை வெல்லும். . குறிக்கோளை விடாது துரத்தும்.

“We had become not a well oiled machine, but adaptable complex organism; constantly twisting, turning, and learning to overwhelm our protean adversary.” [1]

 1. தலைமையை அழித்தால் இயக்கம் அழியாது, வேறு தலைமையுடன் அதே உத்வேகத்துடன் மீள் எழுந்து செயல்படும். இயக்கத்தை அழிப்பது மிகக் கடினமானது.
 1. அதிகாரம் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவதால், அவர்கள் அதிக பொறுப்புணர்வுடன் வீரியமாக கடமையாற்றுவார்கள். அவ்வளவு எளிதில் சோர்வடைய மாட்டார்கள்.

படம்: வேகமான தகவல் தொடர்பாடல்களாலும், உலகம்  ஒன்றோடொன்று  அதிகமாக  இணைக்கப்பட்டதாலும், மாற்றங்கள் வெகுவேகமாக நிகழ்ந்து உலகின் சிக்கல் தன்மை கூடுகிறது. இவ்வாறான உலகில் ஒரு தலைமையால் முழுதும் புரிந்து திட்டமிட்டு செயல்பட முடியாது. இதற்குத்தீர்வு நம்பிக்கையாலும், பொதுவான குறிக்கோளாலும் இணைக்கப்பட்ட குழுக்களின் குழுவை உருவாக்கவேண்டும். அவை உலகைப்பற்றிய ஒரே பார்வை கொண்டு பகிர்ந்த ஒரே உணர்வுடன்  தானாக முடிவெடுத்து செயல்படும். இங்கு தலைமையின் வேலை கட்டளை இடுவதல்ல, மாறாக களைபறித்தல் தான். ஒரு நல்ல தோட்டக்காரர் எவ்வாறு செடிகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி  விளைச்சல்களை உருவாக்குகிறாரோ,, அதுபோல குழுக்கள் மேற்கூறியபடி செயல்படத் தேவையான சூழலை பண்பாட்டை  உருவாக்குவதுதான் தலைமையின் கடமை. இதுபோன்ற குழு ஒரு உயிர் போன்று மாறும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து எதிரியை வெல்லும். . குறிக்கோளை விடாது துரத்தும்.

குழுக்களின் குழு முறையை மேலும் நன்றாக புரிந்து கொள்ள திரபால்கர் போரையும் நாசாவின் சந்திரமண்டல வெற்றியையும் பின் இணைப்பில் கட்டுரையின் இறுதியில் காணவும்.

நாம் எவ்வாறு குழுக்களின் குழுவாக மாறலாம்:

 

இன்று தமிழினம் தமிழகத்திலும் ஈழத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும்  விதமாக மொழி அழிவு, அதிகாரம் பறிப்பு, நிலம் பறிப்பு, குடியேற்றம் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அவை மிகவேகமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் ஒரு முக்கிய தருணத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களிடம், அடுத்த 500 வருடங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டால் அவர்களால் பதில்  கூறமுடியும். ஆனால் இன்றைய  நிலைமை? நம்மால் அடுத்த இருபது ஆண்டுகளில் என்ன நடக்கும் என்றுகூட கூற  முடியாது. வேகமான தகவல் தொழில் நுட்பங்கள், உலகமய  இணைப்புகள் ஆகியன வேகமான மாற்றங்களை உருவாக்கி சமூகத்தின் அனைத்து அங்கங்களையும் வேகமாக மாற்றி வருகிறது.

இது போன்ற வேகமான  மாற்றங்கள் மனித வாழ்க்கையில்  எக்காலத்திலும் நிகழவில்லை. உலகம் சிக்கலாக நம்மால் புரிந்துகொள்ள முடியாதபடி வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது  (Complex world). நாம் வெறு ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன் ஒரு விளைவு என்னவென்றால் நாம் சிக்கல்களைத் தீர்க்க காலகாலமாக பயன்படுத்திய உத்திகள் பெரும்பாலும் வேலை செய்யாது. இந்த உலகில் வெற்றி பெரும் உத்திகள் என்பவை  நாம் நினைப்பதற்கு எதிர்மாறாக, நம்பமுடியாதபடி இருக்கும். அதுபோன்ற உத்திகளை பயன்படுத்த நாம் திறந்த மனதுடன் தயாராக இருக்கவேண்டும். அதுபோன்ற ஒரு  உத்திதான் குழுக்களின் குழு.

இன்றைய நமது செயல்பாடுகள் பெரும்பாலும் மேலிருந்து கீழாக (topdown hierarchical)  திட்டமிடப்படுகிறது. தலைமை முடிவெடுக்கும், தொண்டர்கள் அதை செய்து முடிப்பர். இன்று இந்துத்வ அணிகள் வாரம் ஏதாவது ஒரு பெரிய தாக்குதலை தொடர்ந்து தொடுக்கிறது. ஒன்றுக்கு எதிர்வினை ஆற்றி முடிப்பதற்குள் அடுத்தது வந்துவிடும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக தாவிக்கொண்டிருக்கிறோமே ஒழிய நம்மால் ஏதாவது தீர்க்க முடிந்ததா என்றால், பெரும்பாலும் இல்லை என்றே சொல்லவேண்டும். இதே நிலைமை ஈழத்திற்கும் பொருந்தும். இதனைத் தீர்க்க நாம் முன்பைவிட அதிக முற்சி செய்கிறோம், அப்படி இருந்தும்  முடியவில்லை. மெக்கிறிசுட்டல் என்ன சிக்கலை பார்த்தாரோ அதேதான் நாமும் பார்க்கிறோம். நாம் ஒரே நேரத்தில் பல தாக்குதல்களை பல திசைகளிலிருந்து எதிர்க்கொள்ளவேண்டி இருக்கிறது.  நாம் மேலிருந்து கீழாக செயல்படும் முறை மிக மெதுவாக எதிரியை எதிர்கொள்ளும்படி இல்லை. நமது ஆற்றலை பன்மடங்கு அதிகரிக்க ஒரே வழி நாம் நமது அமைப்புகளை மறுசீரமைப்பதுதான். இதற்கு அமைப்புகளைத்  தலைகீழாக நம்மை மாற்றவேண்டும். அதை  இனி விளக்கமாக பார்ப்போம்.

 1. நாம் மேலிருந்து கீழாக இயங்குவதை விட்டு விலகி, குழுக்களின் குழுவாக செயல்படவேண்டும். இது அரசியல் அமைப்புகளுக்கு மட்டுமல்ல, அனைத்து அமைப்புகளுக்கும் சேர்ந்துதான். எந்த ஒரு அமைப்பை உருவாக்கினாலும், அதை குழுக்களின் குழுவாக உருவாக்கலாம்.  இம்முறையை ஒரு அமைப்பிற்குள் மட்டுமில்லாமல், பல தனித்து இயங்கும் அமைப்புகளை ஒன்று திரட்டவும் பயன்படுத்தலாம். உதாரணமாக, அனைத்து தமிழ்த்தேசிய அமைப்புகளை இணைத்து ஒரு குழுவாக உருவாக்கலாம் (தமிழ்த்தேசியக் குழு). இந்த தமிழ்த்தேசிய குழுவையும்  இந்தியாவில் உள்ள மற்ற தேசிய இனத்தில் உள்ள குழுக்களையும் இணைத்து தேசிய அளவில் ஒரு பெரிய குழுவை உருவாக்கலாம் (இந்தியக்குழு). இவ்வாறு உருவாக்குவதற்கு அடிப்படைத் தேவையானது மெக்கிறிசுட்டல் கூறியவைதான்:  நெருங்கிய நம்பிக்கை/ நட்பு , ஒரே குறிக்கோள், ஒரே பகிர்ந்த பார்வை, மொத்த களநிலவரம், பகிரப்பட்ட அதிகாரம், இவை அனைத்தையும் செய்லபடுத்தத் தேவையான சூழல்/ பண்பாடு.

இன்று ஏன் இந்துத்வா வெல்கிறது என்பதற்குக் காரணம் அவை குழுக்களின் குழு முறையில் அமைக்கப்பட்டிருப்பதுதான்.    இந்துத்வாவின் கீழ்  நூற்றுக்கணக்கான   சங்க பரிவார அமைப்புகள் சேர்ந்து இயங்குகின்றன. அவை ஒரு குழுக்களின் குழு, மெக்கிறிசுட்டல் கூறிய அதே பண்புகளைக் கொண்டுள்ளன. அவை அனைத்திற்கும் நெருங்கிய நம்பிக்கை/ நட்பு உண்டு, அவை வெவ்வேறு கடமைகள் செய்தாலும் அனைத்திற்கும் ஒரே குறிக்கோள்தான், அவை உலகை ஒரே பார்வையுடனே நோக்குகின்றன, அவை அனைத்தும் சுயமாக முடிவெடுத்து இயங்கும் அதிகாரத்தை பெற்றுள்ளன, இவ்வாறு  சேர்ந்து இயங்குவதற்கென்று அவர்களிடம் இந்துத்வா பண்பாடு உள்ளது.

ஆனால் இன்று தமிழ்தேசியக்குழுக்கள் எப்படி இருக்கிறதென்று பார்த்தால் பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சும். ஒரு சிறிய கூட்டணிகூட இல்லை.  தமிழர் நலன் நோக்கிய ஒரு நிரந்தர கூட்டை உருவாக்க முடியாதற்கு காரணம், அக்குழுக்களிடையே நம்பிக்கையின்மை மட்டுமிலாமல், குறிக்கோளும் வெவ்வேறாக இருக்கின்றன;  அவற்றின் உலகை நோக்கிய பார்வையும் வெவ்வேறே; அவற்றை இணைக்க ஒரு பொதுவான  பண்பாடும் இல்லை. இதுதான் சிக்கலே.

 1. குழுக்களின் குழுவில் அனைவரும் பொதுவான குறிக்கோளில் உறுதியாக இருக்கவேண்டும்.ஒவ்வொரு உறுப்பினருடைய துணை குறிக்கோள்கள், முதன்மை குறிக்கோளிலிருந்து பெற்றவையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சுயநலம் ஏற்பட்டு குழு களைந்து விடும். உதாரணமாக. தனக்கு பதவிதான் முக்கியம் என்று நினைப்பவர் வாய்ப்பு கிடைத்தவுடன் கூட்டிலிருந்து விலகிவிடுவார். அதனால் கூட்டில் இருப்பவர்கள் அனைவரும் நம்பிக்கை உடையவர்களாக குறிக்கோளை முதன்மை  குறிக்கோளாக ஏற்றுக்கொண்டு இறுதிவரை விடாதவர்களாக இருக்கவேண்டும். அப்படி  இல்லை என்றால் எந்த ஒரு கூட்டும் ஒரு தேர்தல் கூட்டணி போல தற்காலிகமே. நாம் உருவாக்கவேண்டியது நிரந்தரமான, குறிக்கோளை விடாப்பிடியாக துரத்தும் கூட்டணி. அதற்கு மெக்கிறிசுட்டல் கூறிய பண்புகள் முக்கியம்
 1. தமிழ்தேசியத் தலைமைகள் திட்டமிடுதல் கட்டளையிடுதல் ஆகியவற்றை விட்டுவிட்டு, தங்களது அமைப்புகளை நெருக்கமான/ நம்பிக்கையான குழுக்களின் குழுவாக மாற்றவேண்டும். அனைவரும்  ஒரே குறிக்கோளுடன், ஒரே பகிர்ந்த உணர்வு கொண்ட பார்வையுடன், தானாக முடிவெடுக்கும் அதிகாரத்துடன்  செயல்படவேண்டும். அவ்வாறு  செயப்படுவதற்கேற்ற பண்பாட்டை சூழலை உருவாக்குவதுதான் தலைமையின் கடமை. ஒரு தோட்டக்காரர் போன்று தலைமை செயல்படவேண்டும். அவ்வாறான இயக்கத்தை எப்படி உருவாக்குவது, எவ்வாறான தலமைப் பண்புகள் தேவை போன்ற உதாரணத்திற்கு வேறெங்கும் செல்லவேண்டியதில்லை. அவற்றைப் புலிகளின் செயல்பாட்டைக் கொண்டே கற்றுக்கொள்ளலாம்.

புலிகள் ஒரு சிறந்த குழுக்களின் குழு. இந்தியா 100,000 படைகளைக் கொண்டு புலிகளுடன்  மோதிய பொழுது, வேறு 2000 பேர்களைக் கொண்டு புலிகள் தோற்கடித்தார்கள். அவர்கள் நெருக்கமான நம்பிக்கை கொண்ட, ஒரே குறிக்கோளைக்கொண்ட, ஒரே பார்வை கொண்ட குழுக்களின் குழு. அவர்கள் பிரிந்து பல குழுக்களாக வாய்ப்பு கிடைத்த இடத்திலெல்லாம் அடித்தார்கள். ஒரே தலைமை திட்டமிட்டு செய்யவில்லை. குழுக்கள் தாமாகவே திட்டமிட்டு செய்தார்கள். அவர்கள் தங்களை விட 50 மடங்கு பலம் வாய்ந்த படைகளைத் தோற்கடித்தார்கள். இதுதான் குழுக்களின் குழுவின் பலம் என்பது. பிரபாகரன் ஒரு சிறந்த திட்டமிட்டு செய்லபடும் இராணுவ வல்லுநர் என்று மட்டுமே பலர் கருதுகின்றனர். இது ஒரு குறுகிய பார்வை. அவர் முக்கியமாக ஒரு சிறந்த தோட்டக்காரர். புலிகள் இவ்வாறு செயல்படத்தேவையான பண்பாட்டை அவர் உருவாக்கினார். இப்பண்பாட்டின் கூறுகள் விரிவாக  வேறு கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது [2].

அவர்கள் அவ்வாறு குழுக்களின் குழுவாக இருந்ததால்தான் குறிக்கோளை இறுதிவரை விடாது துரத்தினார்கள். எவ்வளவோ இழப்புகள் ஏற்பட்டாலும் மீண்டும் வீரியத்துடன் எழுந்தார்கள். அவர்களை அழிப்பது அவ்வளவு எளிது அல்ல. ஒரு பெரிய உலக நாடுகளின் கூட்டு சதியால் மட்டுமே அழிக்க முடிந்தது. ஒரு வலைப்பின்னலை உடைக்க இன்னொரு வலைப்பின்னலால் மட்டுமே முடியும். அவர்களைப்போன்ற சிறந்த உறுதியான குழுக்களை வேறு யாரும்  இதுவரை உருவாக்கி இருக்கிறார்களா என்பது சந்தேகமே. நாம் அதுபோன்ற குழுக்களை அரசியல், சமூக அமைப்புகளில் உருவாக்க நினைத்தால் முடிகிற காரியமே. அதற்கு புலிகளின் வரலாற்றுப்பாடங்கள் துணைபுரியும்.

குறிப்பு: புலிகளை எடுத்துக் காட்டாகக் கூறுவது அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்ற பார்வையில்தான். அவர்கள் செய்த எல்லாவற்றையும்  நியாப்படுத்துவதல்ல. அதுபோல ஆயுதப்போராட்டம்தான் செய்யவேண்டும் என்று கூறுவதும் அல்ல.

அவர்களுக்கு நேர் மாறானது திராவிட இயக்கங்களின் கட்டமைப்பு. ஒரு தலைமை திட்டமிட்டு அனைத்தும் செய்யப்படும். விளைவு என்னவானது? தலைமைகள் தவறான கைக்கு சென்றன, அல்லது தலைவரின் ஆணையால் குறிக்கோள்கள் திசை திரும்பின. திராவிட இயக்கங்களின் சிக்கல் என்பது “கட்டமைப்பு” சிக்கல். எந்த தலைமை வந்தாலும் “மேலிருந்து கீழாக” கட்டமைக்கப்படும் அமைப்புகள்,  காலப்போக்கில் இப்படித்தான் அது முடியும்.  இந்துத்வா நூறாண்டுகளுக்கு மேலாக குறிக்கோளை விடாது துரத்த முடிவதுதான் காரணம் அவை குழுக்களின் குழுவாக இருப்பதால்தான். அதை எந்த  ஒரு தனி மனிதராலும் திசை திருப்ப முடியாது.

அது ஏனென்றால் குறிக்கோளை அனைவரும் ஏற்றுக்கொண்டு இறுக்கமான நம்பிக்கையுடன் ஒரு பண்பாட்டின் மூலம் செயல்படுவார்கள்.  தலைவர் குறிக்கோளை மாற்றவேண்டும் என்று நினைத்தாலும், குழுக்கள் விடமாட்டார்கள். அவ்வாறான தலைவரை நம்பிக்கை துரோகியாகவே பார்த்து தலைமையை மாற்றிவிடுவார்கள். குழுக்களின் குழுவில் பிரபாகரன் போன்று “குறிக்கோளிலிருந்து நான் விலகினால் என்னை  சுட்டுவிடுங்கள்” என்று கூறுபவர்தான் தலைவராகவே இருக்க முடியும்.  தலைவர் என்பவர் அவ்வாறான குழுக்களை உருவாக்கத்தான் தேவை. அதன் பின்பு அது தனக்கென்று ஒரு உயிர் பெற்றுவிடும். அதை எந்த ஒரு தனி ஒருவானாலும் திசை மாற்றமுடியாது. நமது உடலில் காயம் பட்டால் எவ்வாறு உடல் சரி செய்து கொள்கிறதோ, அதுபோல ஏற்படும் பிழைகளை இழப்புகளை அதுவே சரி செய்து கொள்ளும். இதுதான் 21-ஆம் நூற்றாண்டுக்கான அமைப்புகளின் வடிவமைப்பு.

“The future will take the form of organic networks, resilience engineering, controlled flooding, a world without stop signs.” [1]

 1. இன்று பல போராட்டங்கள் தலைமையால் திட்டமிட்டு பெரிய அளவில் ஓரிடத்தில் நடத்தப்படுகின்றன. அதற்கு பல கெடுபிடிகள் நடக்கும், மேலும் அனுமதி சிலநேரம் அளிக்கப்படுவதில்லை, அதிக பொருட்செலவு ஏற்படுகிறது. அவ்வாறில்லாமல் மாறாக தனித்தனி குழுக்களால் அவர்கள் காணும் சிக்கலை அப்பொழுதே அங்கேயே போராடினால் என்னவாகும்? குறைந்த பொருட்செலவில் வெற்றிகரமாக  உடனடியாக நடத்தலாம். எதிரிகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் நடந்து முடிந்துவிடும்.

இன்று ஓர் அமைப்பின் தகவல்கள் மேடைப் பிரச்சாரம் மூலம் செய்யப்படுகிறது. இது உண்மையிலேயே பயனுள்ளதுதானா? ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறினார்:  எங்கு போய் என்ன பேசினாலும் அதே முகங்கள்தான் தென்படுகின்றன என்று கூறினார். இதனால் என்ன பயன்? இதற்கு மாறாக சிறு சிறு குழுக்களாக மக்கள் உள்ள இடத்தில் பேசினால், தகவலும் போய் சேரும், அனுமதியும் தேவையில்லை, கெடுபிடியும் இருக்காது, செலவும் குறையும்.  நாம் என்ன செய்கிறோம் என்று கூட எதிரிக்குத் தெரியாது. இதே முறையில்தான் இன்று இந்துத்வா தமிழ்நாட்டில் RSS இயக்கங்கள் மூலம் அமைதியாக ஊடுருவிக்கொண்டிருக்கிறது. வெளியில் தெரிவதைவிட, அவர்கள் வெளியில் தெரியாமல் செய்வது அதிகம்.

இது சில உதாரணங்களே, இது போன்ற பலவேலைகளை செய்யலாம். நாம் சோதனைக்குத் தயாராக இருக்கவேண்டும். எந்த உத்திகள்  வேலை செய்கிறது என்று விரைந்து  கண்டுபிடித்து அதை பலகுழுக்களிடம் விரிவாக்கவேண்டும். குழுக்களின் குழுவில் இதுபோன்ற விரைந்த சோதனைகளும் கற்றலும் நடக்கும், அமைப்பு வெகு வேகமாக வளரும். மேலிருந்து கீழ் அமைப்பில் அனைத்தும் மெதுவாகவே நகரும். கற்றலே இல்லாமல் தேங்கும் ஆபத்தும் ஏற்படும். இன்று திராவிட இயக்கங்கள் அதுபோன்ற தேக்கநிலையிலேயே பல பத்தாண்டுகளாக உள்ளன.

 1. சமூகம் என்பது சிக்கலான அமைப்பு. அதில் அரசியல் என்பது ஒரு பகுதிதான். உதாரணமாக இந்துத்வாவை பாருங்கள். அவர்கள் உச்சநீதி மன்றம் முதல் கிரமாக் கோவில்கள் வரை கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் அல்லது முயல்கிறார்கள்.  சந்திரனுக்கு செல்லும் விண்கலத்திலிருந்து சாதாரண மனிதனின்  பெயர் வரையிலும் வடமொழியைத் திணிக்கிறார்கள். அவர்கள் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பிரிவுகளிலும் நுழைகிறார்கள். அவர்களின் குறிக்கோளையே அடைய  அனைத்து வழியிலும் முயல்கிறார்கள், அரசியலை மட்டும் நம்பியல்ல. இதற்கு மாறாக தமிழ்த்தேசியம் அரசியலை மட்டுமே செய்கிறது. இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறுவது கடினம். அரசியல் என்று தனித்து பார்க்காமல்,  நாம் சமூகத்தை அனைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்ட அமைப்பாக பார்க்கவேண்டும். அவ்வாறு ஒட்டு மொத்தமாக பார்த்து செயல்படும்பொழுதே வெற்றி கிடைக்கும். [4, 5]

நாம் உருவாக்க நினைக்கும் சமூக அமைப்புகளை பல பாகங்கள் இணைத்து கட்டப்பட்ட ஒரு கப்பலைப் போல பார்க்கவேண்டும்.  அகப்பலின் பலம் தனி ஒரு பாகத்தினால்  வருவதல்ல, அதன் பலம் அவை எவ்வாறு இணைத்துக் கட்டப்பட்டுள்ளன என்பதிலிருந்து வருகிறது. அவ்வாறான கப்பல் தானாக மிதக்கும். அது மூழ்காமல் இருக்க வேறு எதுவும் அதைத் தூக்கிப்பிடிக்கத் தேவையில்லை. ஒவ்வாரு பாகத்தையும்  மற்ற  பாகங்கள் தூக்கிப்பிடிக்கும். அதுபோலத்தான் நாம் உருவாக்கும் சமூக அமைப்புகள் இருக்கவேண்டும். சமூகத்தின் அனைத்து துறைகளிலும் அமைப்புகளை உருவாக்கி இணைத்து செயல்படவேண்டும். அவை அனைத்தும்  குழுக்களின் குழுவாக கட்டமைக்கவேண்டும் [3].

 1. குழுக்களின் குழுவின் வலைப்பின்னலைப் படமாக வரைந்தால், பார்ப்பதற்கு அலங்கோலமாக (messy) இருக்கும் (பார்க்க படம்). ஆனால் அதுதான் இந்த சிக்கலான உலகில் தேவையானது. ஓர்  உயிர் வாழவேண்டுமானால், அது  எதிர்நோக்கும்  சூழலின் சிக்கலுக்கு ஏற்ப தனது அமைப்பை வடிவமைத்துக் கொள்ளவேண்டும். இன்று பல உயிரினங்கள்  அழிவதற்குக் காரணம், வேகமாக மாறும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியாததால்தான். நாம் எதிர்நோக்கும் இன்றைய உலகு அலங்கோலமானது, அதனால் நாம் உருவாக்கும் அமைப்புகளும்  அலங்கோலமானதாகவே இருக்க்கவேண்டும். உலகம் விரைவாக மாற மாற,  நாமும் அதற்கேற்ப  மாறிக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறான மாற்றத்திற்கு  குழுக்களின்குழு  அமைப்பே உகந்தது.  குழுக்களின் குழு எப்பொழுதும் தனித்து செயல்படவேண்டும் என்று பொருள் அல்ல. தேவைப்பட்டால் அவை ஒருங்கிணைத்து பெரிய படை நகர்வுகளைக் கூட நடத்த முடியும்.  நேரத்திற்கேற்ப அவை எப்படி வேண்டுமானாலும் மாறி இணைந்து செயல்படும்.
 1. ஒரு பத்து இருபது ஆண்டுகளுக்குமுன், நாம் நினைக்கும் குழுக்களின் குழுவை உருவாக்குவது கடினமானது. அன்று இன்றைய  தகவல் தொழில்நுட்பங்கள் இல்லை. இன்று நாம் வேகமான தகவல் தொழில் நுட்பத்தையும் சமூக ஊடகங்களையும்  முழு வீச்சில் பயன்படுத்தி குழுக்களின் குழுவை உருவாக்குவது சாத்தியமானதே.

இவ்வாறு நாம் உருவாக்கும் அமைப்புகள்  மிகவேகமாக செயல்படும்,  குறிக்கோளை விடாது துரத்தும், பன்மடங்கு ஆற்றல் பெரும், எளிதில் எதிரியால் அழிக்கமுடியாது, தேவைக்கேற்ப எளிதாக மாறிக்கொள்ளும். இதுபோன்ற அமைப்புகளே எதிர்காலத்தில் பிழைக்கும். இன்று இந்த தத்துவத்தின் அடிப்படையிலே பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களை மாற்றி அமைத்துக்கொண்டு வருகின்றன. இது  விரைவில் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பரவும். அந்த திசையில் தமிழ்த்தேசியம் பயணிக்கவேண்டியது  இன்றைய தேவை.

உசாத்துணை:

 1. McChrystal, Gen Stanley, et al. Team of teams: New rules of engagement for a complex world. Penguin, 2015.
 2. ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 4, https://sethusubbar.wordpress.com/2019/02/24/eelamlesson4/
 3. யார் ஆட்சி செய்வது?, https://sethusubbar.wordpress.com/2018/07/02/whoshouldrule/
 4. Meadows, Donella H. Thinking in systems: A primer. chelsea green publishing, 2008.
 5. Bar-Yam, Yaneer. Making things work: solving complex problems in a complex world. Knowledge Industry, 2004.

உதாரணங்கள்:

குழுக்களின் குழு முறையை நன்றாக புரிந்துகொள்ள  மேலும் சில எடுத்துக்கட்டுகளைப் பார்ப்போம்.

 1. 1805-இல் இங்கிலாந்தின் கடற்படைக்கும் நெப்போலியனின் பிரஞ்சு கடற்படைக்கும் இடையே திரபால்காரில் கடற்போர் ஏற்பட்டது (Battle of Trafalger). இங்கிலாந்தின் படைகளுக்கு புகழ்பெற்ற ஒற்றைக்கண் நெல்சன் தலைமை தாங்கினார். இப்போரில் நெல்சன் தோற்றால், நெப்போலியனிடம் இங்கிலாந்து வீழும். இங்கிலாந்தின்  28 கப்பல்களும் பிரான்சின் 33 கப்பல்களும் மோதின. போர் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் நெல்சன் மேல் குண்டு பாய்ந்து அவர் செயலிழக்கிறார். அவர் எந்த  உத்தரவும் பிறப்பிக்கும் நிலையில் இல்லை, மெதுவாக இறந்து கொண்டிருந்தார். அதன் பிறகு மூன்று மணிநேரம் போர் நடக்கிறது, முடிவில் நெல்சனின் படைகள் வெற்றி பெறுகின்றன. போரின் வெற்றிச்செய்தியை கேட்டபின்பு நெல்சன் வீரமரணம் அடைகிறார். அன்றைய உலகில் போர் தளபதி இறந்தால், அந்த படை வெற்றிபெற வாய்ப்பே இல்லை. படைகளை வழி நடத்த ஆளின்றி படை தோற்கும். இதை அன்றைய பிரஞ்சு  அதிகாரியே ஒத்துக்கொள்கிறார். அப்படி இருந்தும் எப்படி நெல்சனின் படைகளை வென்றன?  நெல்சனின் கீழுள்ள அதிகாரிகள் நெல்சனுடன் நெருங்கிய நட்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள். போரில் அவர்களுக்கு சுயமாக முடிவெடுக்கும்  அதிகாரத்தையும் அளித்திருந்தார். அவர்களுக்கு நெல்சனின் சிந்தனை எப்படி என்பதை சொல்லாமலே புரிந்துகொள்ளும் அளவுக்கு புரிதல் இருந்தது. போரிலிருந்து நெல்சன் நீக்கப்பட்டாலும், அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் போரை வெற்றிகரமாக நடத்தினார்கள். ஒவ்வொரு தளபதியும் நெல்சன் ஆனார்கள். எப்படி ஒரு கால்பந்தாட்ட அணி, சூழலை கவனித்து வேகமாக நகர்வுகளை மேற்கொள்வார்களோ, அது  போல நெல்சனின் படைகள் நகர்ந்தன. அவர்களின் வேகத்திற்கு முன் பிரஞ்சுப்படைகள் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு பிரஞ்சு கப்பலும், கட்டளைத் தளபதியின் ஆணைக்காக  காத்திருந்தார்கள். அதனால் அவர்களின் நகர்வுகள் மெதுவாக ஏற்பட்டன. நெல்சனின் படைகள் வேகமாக புகுந்து பிரஞ்சு கப்பல்களை நொறுக்கின.  இவ்வாறுதான் நெல்சன் வெற்றி பெற்றார்.
 1. 1961-இல் அமெரிக்க சனாதிபதி கென்னடி, பத்து வருடத்திற்குள் அமெரிக்கா சந்திரனுக்கு செல்லவேண்டும் என்று அறிவிக்கிறார், ஆனால் நாசா அதை செய்து முடிக்கும் நிலையில் அன்றில்லை. சிறிய ராக்கெட்டுகளை பூமியை சுற்றிவர அனுப்பவதிலேயே பல தோல்விகள் ஏற்பட்டன. அப்பொழுது நாசாவில் ஒவ்வொரு குழுவும் தனித்து இயங்கும். ஒவ்வொருவரும் ஒரு பாகத்தை தனியாக வடவமைப்பார்கள்; பின்பு எல்லாவற்றையும் இணைந்து ராக்கெட்டை உருவாக்கி ஏவுவார்கள். ஒவ்வொரும் முறையம் பாகங்களை இணைப்பதில் ஏதாவது ஒரு பிழை ஏற்படும், அதன் காரணமாக ஏவுதல் தோல்வியில் முடியும்.  அவர்களின் சிக்கல் என்பது தொழில் நுட்பத்தில் அல்ல, மாறாக இணைந்து செயல்படுதலிலே இருந்தது. இதை உணர்ந்து பெரிய நிர்வாக மறு  சீரமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
 • அனைத்து குழுக்களின் தகவல்களும் ஒரு மத்திய இடத்தில் திரட்டப்பட்டது. அத்தகவல் அனைவருக்கும் கிடைக்க வழி செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் 250 ரேடியோ சேனல்களில் வெவ்வேறு பாகங்களில் நடக்கும் வேலைகளைப் பற்றி  தகவல்கள் ஒலிபரப்பப்பட்டன. நாசாவில் யார் வேண்டுமானாலும் கேட்கலாம்.
 • குழுக்கள் தனித்து செயல்படாமல் இணைந்து செயல்படும் பல வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் பாகங்களின் இணைப்பில் ஏற்படும் தவறுகள் கண்டறிந்து முதலிலேயே திருத்தப்பட்டன. பல பாகங்கள் வெளியிலே இருந்து கொண்டு வரப்பட்டதால், அந்த உற்பத்தியாளர்களும் குழுவில் இணைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.
 • நாசாவின் சந்திரமண்டல திட்டத்தில் 3,00,000 பேர்களும் , 20,000 வெளி உற்பத்தியாளர்களும், 200 பல்கலைக்கழகங்களும் இணைந்து 19 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நடந்தது. இவ்வளவு பெரிய திட்டத்தை வெற்றிகரமாக  நடத்த தொழில் நுட்பம் மட்டும் போதாது, அதை எப்படி நிர்வகிப்பது என்பது தொழிநுட்பத்திற்கு ஈடான சிக்கல். இந்த நிர்வாக சிக்கலை தீர்ப்பதின் மூலமே நாசாவால் வெற்றிகொள்ள முடிந்தது.

“The Apollo project … is generally considered as one of the greatest technological endeavors in the history of mankind. But in order to achieve this, a managerial effort, no less prodigious than the technological one, was required.” [1]

 • அமெரிக்காவைப்போன்று அன்று ஐரோப்பாவின் ELDO என்ற அமைப்பும் பல ஐரோப்பிய நாடுகளின்கூட்டு ஒத்துழைப்புடன்   பெரிய கனவுடன் செயல்பட்டது. அவர்கள் தொழிநுட்பத்தில் அன்று அமெரிக்காவிற்கு சளைத்தவர்கள் அல்ல. ஒவ்வொரு நாடும் ஒரு பாகத்தை எடுத்து வடிவமைத்தது, ஆனால் அவை தனித்து செயல்பட்டன. இதன் விளைவாக ஐந்து முறை தொடர்ச்சியாக அதன் ராக்கெட் ஏவுதல்கள் தோல்வியில் முடிந்தன. ஒவ்வொரு முறையும் பாகங்களின் இணைப்பிலேயே பழுது ஏற்பட்டது. முடிவில் அவர்களின் திட்டம் கைவிடப்பட்டது. அவர்களை தோற்றது நிவாகத்தின் காரணமாக, தொழில் நுட்பத்தின் காரணமாக அல்ல.

One thought on “குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s