பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள்

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம்  என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன். தமிழகத்தின், ஈழத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.

பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள்

புலிகளின் உத்திகளைப் பற்றி ஒருவருடன் இணையத்தில்  உரையாடும்பொழுது அவர் “புலிகள்தான் தோற்றுவிட்டார்களே, அப்படி என்றால் அவர்களின் உத்திகள் சரியில்லை என்றுதானே பொருள்” என்று கூறினார். இதுபோன்ற கருத்துக்கள் உத்திகளைப் பற்றிய எளிமையான பார்வையினால் உருவாவது. நாம் உலகிலேயே சிறந்த உத்திகளைப் பயன்படுத்தினாலும், அது நமது வாய்ப்புகளைத் தான் கூட்டமே ஒழிய உறுதியாக வெற்றியடைவோம் என்ற உறுதியைத் தரமுடியாது. அதுபோன்ற நிலைதான் புலிகளுக்கு ஏற்பட்டது. புலிகளைப் பற்றி பலர் உணராதது என்னவெனில், புலிகள் பலவகைகளில் உத்திகளில் உலகிலேயே முன்னோடிகளாக இருந்தவர்கள். இந்நூலிற்கான கரு என்பதே  புலிகளின் உத்திகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் வழியேதான் எனக்குக் கிடைத்தது[69,70,71,72,73]. இந்த உத்திகளுக்குச்  சரியான பெயர் வைக்க வேண்டுமானால் அது “பிரபாகரன் சட்டகம்” என்பதே பொருத்தமானதாக இருக்கும். அவர்களின் உத்திகள் என்பது அடிப்படையில் நாம் இதுவரை இந்நூலில்  பார்த்த உத்திகளே. இனி புலிகள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்று பார்ப்போம்.

 1. புலிகளின் அடிப்படைக் குறிக்கோள்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு உலகிற்கே தெரிந்த ஒன்று.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

“கல்வியும் மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள்” – பிரபாகரன் அவர்கள்

புலிகள் இயக்கம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நடத்திய அனைத்து செயல்பாடுகளும் மேலுள்ள குறிக்கோள்களை நோக்கியதே.  இந்தியா வந்து மிரட்டிய போதும் குறிக்கோள்களை விட்டுக்கொடுக்கவில்லை;  பின்பு உலகமே வந்து மிரட்டியபோதும் அடிபணியவில்லை. ஏனென்றால் இந்த அடிப்படைக் குறிக்கோள்களைக் கைவிட்டால் தேசியம் என்பதே இருக்கப்போவதில்லை என்பதை அவர்கள் அறிந்ததுதான். எதில் வேண்டுமானாலும் ஒரு தேசியம் சமரசம் செய்யலாம், ஆனால் அடிப்படைக் குறிக்கோள்களில் சமரசம் செய்யமுடியாது.

“தமிழினம் வெறுமனே நிலத்துக்காக மட்டும் இதுவரை போராடவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற போராட்டமானது மண்மீட்புக்கானது மட்டுமல்ல. கல்வியும் மொழியும் பண்பாடும் நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் என்று எமது தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போல தமிழ் மக்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமே கடந்த 30 வருடங்களாக இடம்பெற்றது… யுத்தத்துடன் மட்டும் நின்றுவிடாமல் சம காலத்திலேயே எமது அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் தேசியத் தலைவர் முனைப்புடன் செயற்பட்டார். அதற்காக பல அமைப்புகளை உருவாக்கி அவற்றைத் திறம்படச் செயற்படுத்தியிருந்தார்.” [76]

 1. புலிகள் இயக்கம் என்பது முழுத்திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் கிடையாது. அது ஈழ சூழலுக்கேற்ப படிப்படியாக பரிணமித்த தனித்துவமான இயக்கம். யாரையும் நகல் எடுத்து உருவாக்கப்பட்ட இயக்கமல்ல. ஒரு மனிதன் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்து ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து படிப்படியாக பல்வேறு படையணிகளையும் கட்டமைப்புகளையும்   வளர்த்த  இயக்கம்.
 1. புலிகள் எப்பொழுது ஈழத்தை அடைவோம், எப்படி ஈழத்தை அடைவோம் என்று கூறவில்லை. அதுபோன்ற பாதையை யாராலும் இச்சிக்கலான உலகில் வகுக்க முடியாது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவர்கள் பல்வேறு படையணிகளை அமைப்புகளைக் கட்டி எழுப்பி வெற்றிக்கான வாய்ப்புகளைக் கூட்டுவதன் அடிப்படையிலே செயல்பட்டார்கள்.
 1. புலிகள் தங்களை ஒரு குழுக்களின் குழுவாக கட்டமைத்துக் கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன், ஒரே உணர்வுடன், இறுக்கமான நட்புடனும் நம்பிக்கையுடனும் குழுக்களின் குழுவாகச் செயல்பட்டனர். அவர்களைப் போல சிறந்த குழுக்களை உலகில் வேறு எவராலும் உருவாக்கமுடியுமா என்பது ஐயமே.
 1. புலிகளை ஒரு ஒற்றைத் தலைமையினால் கட்டப்பட்ட சர்வாதிகார இயக்கம் என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். குழுக்களின் குழு அவ்வாறு இயங்க முடியாது. அதற்கான தலைமைப் பண்புகளே வேறு. இவற்றை குழுக்களின் குழு பகுதியில் பார்த்தோம்.

ஒரு குழுக்களின் குழுவில் தலைமையின் முதற் கடமை என்பது அமைப்பு செழிப்பதற்கான பண்பாட்டு சூழலை உருவாக்குவதுதான், சதுரங்க ஆட்டத்தைப்போன்று  காய்களை  நகர்த்துவது அதற்குப்பின்புதான்  வரும். பிரபாகரன் அவர்களின் செயல்பாடுகளை  கூர்ந்து கவனித்தால் இத்தன்மை விளங்கும். அவர்தான் இயக்கத்திற்கு அடிப்படையான புலிப்பண்பாட்டை உருவாக்கினார்[71], நெருக்கமான குழுக்களை கட்டி அமைத்தார், பல படையணிகளை உருவாக்கி இணைத்தார், வலைப்பின்னலை உலக அளவில் பெரிதாக்கினார், தொடர்ந்து இயக்கத்தின் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் காத்தார்.  அவரின் பேச்சும் செயலும் எப்பொழுதும்  ஒத்திருக்கும், முரண்கள் இருக்காது. ஈழத்திலிருந்து பின்வாங்கினால் தன்னை சுட்டு விடுங்கள் என்று கூறியது, தனது குடும்பத்தை இறுதிவரை களத்திலேயே வைத்திருந்தது, எளிமையாக வாழ்ந்தது, முன்னின்று போர் புரிந்தது  என்று மற்ற வீரர்களுக்கு முன்னதாரணமாக திகழ்ந்தார். அவர் உருவாக்கிய சூழலில் நூற்றக்கணக்கான திறமையான தளபதிகளும், ஆயிரக்கணக்கான ஓர்மை கொண்ட புலிவீரர்களும் உருவாகினர். புலிப்படை என்பது பிரபாகரன் என்ற தோட்டக்காரர் உருவாக்கிய விளைச்சல், ஒர்  அதியுச்ச திறமை கொண்ட  குழுக்களின் குழு. இதுதான் இருப்பதிலேயே பிரபாகரன் அவர்களின் முக்கியமான தலைமைச் செயல்பாடு. போர் உத்திகள் வகுப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதை அவரின் படைத்தளபதிகளே பெரும்பாலும் பார்த்துக்கொள்வார்கள்.

பிரபாகரன் அவர்கள் அதிகாரத்தை தளபதிகளிடம் பகிர்ந்தளித்து குழுக்களின் குழுவாக செயல்பட்டவர். அவரின் முக்கிய வேலை என்பது தோட்டக்காரர் போன்றது, கட்டளை இடுவது அல்ல. புலிகளின் ஆற்றல் என்பது   குழுக்களின் குழுவில் உள்ளடங்கிய சனநாயகப் பண்புகளிலிருந்தே வருகிறது.  ஒரு இயக்கம் தேர்தலில் போட்டி இடுவதால் மட்டுமே அது சனநாயகப் பண்புகள் கொண்ட இயக்கமாகாது. அதுபோல போரிடுவதால் ஒரு அமைப்பு சர்வாதிகார இயக்கமாக ஆவதும் கிடையாது. ஒரு இயக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு அதிகாரம் பகிரப்படுகிறது என்பதே சனநாயகப் பண்புகளை தீர்மானிக்கிறது.

 1. புலிகள் தேசியச் சிக்கலை ஒரு இராணுவ உத்தி என்று ஒற்றைப்பார்வையில் பார்க்கவில்லை. மாறாக அதனை சமூகப் பண்பாட்டிலிருந்து உலக அரசியல்வரை தொடர்புகொண்டு ஒரு சிக்கலான அமைப்பாகவே (complex System) பார்த்தனர். அதனால் இராணுவ அமைப்பு மட்டும் என்றில்லாமல், பண்பாடு, ஊடகம், மொழி, அரசியல் கட்சிகள், உலகளாவிய தமிழர் அமைப்புகள், பொருளாதாரம், மற்ற நாடுகளுடனான உறவுகள் என அனைத்தையும் கட்டி ஆளும்  அளவிற்கு அமைப்புகளை உருவாக்கினார்கள்.  இவ்வாறு பல்வேறு அமைப்புகளைக் கட்டி எழுப்பி வெற்றிவாய்ப்புகளைப் பெருக்கினார்கள் அடிப்படையில்  அவர்கள் ஒரு உத்தி  என்றில்லாமல் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தினார்கள். இதுதான் அவர்கள் கூறாமல் செயல்படுத்திய பெருந்திட்டம்.

அவர்கள் எங்கெங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் உத்திகளைப் பெருக்கினார்கள். அவ்வாறான செயல்பாடு படைத்துறையில் மிக அதிகம். பீரங்கிப்படை, கடற்படை, வான்படை,  என்று படைத்துறைக் கட்டுமானங்கள் வளர்ந்துகொண்டே சென்றனர். இன்று இருந்தால் அவர்கள் விண்ணையும் கைப்பற்றி இருப்பார்கள்.

அவர்களின் பெருந்திட்டம் என்பது தொடர்ந்து கற்று, புதுப்புது அமைப்புகளைக் கட்டமைத்து வெற்றி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொண்டே செல்வதுதான். அதை படைத்துறை என்றில்லாமல்  அனைத்து துறைகளிலும் செய்தார்கள், ஈழத்திலிருந்து உலகம் வரை உருவாக்கினார்கள். இவை எல்லாம் சாத்தியமானதற்கு முக்கியக் காரணம் அவர்கள் தங்களை குழுக்களின் குழுவாகக் கட்டமைத்ததே. ஒரு தலைவர் திட்டமிட்டு அனைத்தையும் சர்வாதிகார முறையில்  உருவாக்கவேண்டும் என்று நினைத்தால் அது முடியாத காரியம்.

 1. அவர்கள் எதிரும் புதிருமான உத்திகளைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். ஆயுதப்போராட்டம் செய்தாலும், திலீபன் உண்ணாவிரதம் இருந்த அமைதிப்போராட்டமும் நடந்தது. அரசியல் கட்சிகளையும் இணைத்து  ஒரே குறிக்கோளை நோக்கி பயணித்தனர். ஆயுதப்போராட்டம் என்பதால், அவர்கள் அரசியலை நிராகரிக்கவில்லை. அரசியல் அமைப்புகளையும் வெற்றிக்குத்தேவையான கருவிகளாகப் பார்த்தனர். எப்பொழுது   அரசியல் கட்சிகள் ஒரே குறிக்கோளில் இணைந்து பயணிக்கவில்லையோ, அப்பொழுதே  முறுகல்நிலை ஏற்பட்டது. அடிப்படையில் அவர்கள் அனைத்து உத்திகளையும் சூழலுக்குத் தகுந்து  பயன்படுத்தினர். ஆனால் குறிக்கோளில் எந்த மாற்றமும் இருக்காது.
 1. அவர்கள் அதிவேகமாக அமைப்புகளை உருவாக்கி, சோதனைகள் செய்து கற்று அதிவேகமாக வளர்ந்தார்கள். ஒற்றைத்த்துப்பாக்கியில் ஆரம்பித்த இயக்கம் வான்படை வரை வளர்வது கற்றல் இல்லாமல் சாத்தியமில்லை.
 1. புலிகள் இயக்கம் மீளெழும்பும் (Resilient) இயக்கம், நொறுங்கும் (fragile) இயக்கம் அல்ல. காலப்போக்கில் எத்தனையோ மிச்சிறந்த தளபதிகளை இழந்தாலும், புலிகள் இயக்கம் சரியவில்லை. மேலும் அதிகமாக புதிய தளபதிகள் வளர்த்தெடுக்கப்பட்டு இயக்கம் முன்னேறிச்சென்றது. பிரபாகரன் இல்லாவிட்டாலும் அவ்வியக்கம் தொடர்ந்திருக்கும் என்று ஆய்வாளர் தராகி சிவராம் குறிப்பிட்டுள்ளார். இது ஏனென்றால் குறிக்கோளை அனைவரும் ஏற்றுக்கொண்டு இறுக்கமான நம்பிக்கையுடன் ஒரு பண்பாட்டின் மூலம் செயல்படுவார்கள். தலைவர் குறிக்கோளை மாற்றவேண்டும் என்று நினைத்தாலும், குழுக்கள் விடமாட்டார்கள். அவ்வாறான தலைவரை நம்பிக்கை துரோகியாகவே பார்த்து தலைமையை மாற்றிவிடுவார்கள். குழுக்களின் குழுவில் பிரபாகரன் போன்று “குறிக்கோளிலிருந்து நான் விலகினால் என்னை  சுட்டுவிடுங்கள்” என்று கூறுபவர்தான் தலைவராகவே இருக்க முடியும்.  தலைவர் என்பவர் அவ்வாறான குழுக்களை உருவாக்கத்தான் தேவை. அதன் பின்பு அது தனக்கென்று ஒரு உயிர் பெற்றுவிடும். அதை எந்த ஒரு தனி ஒருவானாலும் திசை மாற்றமுடியாது. நமது உடலில் காயம் பட்டால் எவ்வாறு உடல் சரி செய்து கொள்கிறதோ, அதுபோல ஏற்படும் பிழைகளை இழப்புகளை அதுவே சரி செய்து கொள்ளும். குறிக்கோளை விடாப்பிடியாக நிற்காமல் துரத்தும்.

பொருளாதார உத்திகள்

 1. புலிகளின் இயக்கத்திற்கான பொருளாதாரம் என்பது மக்களிடமிருந்தும் தங்களது செயல்பாடுகளில் இருந்து மட்டுமே வந்தது. பொருளாதாரத்திற்கு என்று உலகளாவிய அமைப்புகளைக் கட்டி எழுப்பினார்கள்  அந்நிய உதவிகள் என்பது இலவசமல்ல,  அவர்களின் கட்டளைகளை கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் இயக்கத்தின் பொருளாதாரம் என்பது வெளியார் யாரையும் நம்பி கட்டமைக்கப் படவில்லை.
 1. இருக்கும் பொருளாதாரத்தை மிகச் சிக்கனமாகப் (efficient) பயன்படுத்தினர். பல்வேறு ஆயுதங்களை தாங்களே உற்பத்தியும் செய்தார்கள். உதாரணமாக சிறிய விமானங்களை வாங்கி போர் விமானங்களாக மாற்றினார்கள்.
 1. எதிரியின் ஆற்றலை வீணடித்தனர் உறிஞ்சினர். பல ஆயுத தளபாடங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.   சிறுபடைகளைக் கொண்டு பெரு நட்டத்தை எதிரிக்கு உருவாக்குவதில் அவர்கள் கைதேந்தவர்கள். இலங்கையின் பொருளாதாரத்தை சிதைத்தார்கள்.

அறிவுசார் உத்திகள்:

 1. அவர்கள் போர் உத்திகளில் மட்டுமில்லாமல், அமைப்புகளைக் கட்டமைக்கும் முறைகளிலும் உலகில் முன்னோடியாக இருந்தார்கள். அவர்கள்தான் முதன்முதலில் குழுக்களின் குழு முறையில் செயல்பட்டு மாபெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள். அவ்வாறில்லாமல் இந்தியப்படைகளையும் உலக இராணுவங்கள் பயிச்சி அளித்த இலங்கைப் படைகளையும் பலமுறை தோற்கடித்தது சாத்தியப்பட்டிருக்காது. அவர்களின் அறிவு கற்றலின் மூலமும், அனுபவங்களின் மூலம் படிப்படியாக பரிணமித்து வந்தவை.
 1. போரில் எதிரியின் நிலைகளைப் பற்றிய அறிவு உளவு மூலம் வருவதால், மிகச்சிறந்த உளவுப்படையைக் கட்டமைத்தார்கள். அதே நேரம் தங்களின் நிலைகளைப் பற்றி இரகசியம் காத்தார்கள்.

மொத்தத்தில் புலிகள் இலங்கையைவிட அறிவிலும், ஆற்றலிலும், வேறுபட்ட உத்திகளிலும் உயர்ந்திருந்தனர். போர் உத்திகளிலும் அமைப்பு முறைகளிலும் உலகிற்கே முன்னோடியாக இருந்தனர். மாறாக இலங்கை காலாவதியான போர்  உத்திகளைப் பயன்படுத்தினார்கள். அவர்களின் பொருளாதாரத்தை புலிகள் கடுமையாக சேதப்படுத்தினர், பொருளாதாரம் ஒற்றைக்காலில் உலகநாடுகள் அளித்த கடன்களில் நொண்டிக் கொண்டிருந்தது. இதன் விளைவாக  மூன்றாம்  ஈழப்போரில் உலகம் வியக்கும் சாதனைகளைப் படைத்தனர். அப்படி இருந்தும் ஏன் 2009-இல் பின்னடைவு ஏற்பட்டது என்று கேள்வி எழும். புலிகள் இலங்கையை எப்பொழுதோ தோற்கடித்துவிட்டனர்.  அவர்கள் 2009-இல் பின்னடைவை சந்தித்தது உலகத்திடம், இலங்கையிடம் அல்ல.  2001-ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலின்பின் உலகில் அனைத்து போராடும் குழுக்களுக்கும் எதிரான நிலை ஏற்பட்டது. புலிகளின் பொருளாதாரம் முடக்கப்பட்டது, ஆயுத வரவு முடக்கப்பட்டது, காட்டிக் கொடுக்கப்பட்டது; ஆனால் அதே நேரம் இலங்கைக்கு பலகோடிகள் கடன் அளிக்கப்பட்டது, ஆயுதங்கள் கொட்டப்பட்டது, புலிகளுக்கு எதிரான புதிய போர் வியூகங்களை உலக இராணுவங்கள் கற்பித்தன, பல உலகத்தமிழர் அமைப்புகள் தடை செய்யப்பட்டன, உலக ஆதரவு இலங்கைப் பக்கம் சென்றது என்று அனைத்தும் புலிகளுக்கு எதிராக உலகம் செய்தது. இந்த நிலைமையில் யார்தான் போரிடமுடியும்? இத்தனைக்கும் 2001-இல் நடந்த நிகழ்வுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு பூலோக அரசியல் சுனாமி, அனைத்து தேசிய  போராட்டங்களையும் தாக்கியது. இதுபோன்ற முற்றிலும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எப்படி திட்டமிடமுடியும்?  புலிகளுக்கு 2009-இல் பின்னடைவு ஏற்பட்டாலும் புலிகள் மீண்டெழுந்திருப்பார்கள், ஆனால் புலிப்பண்பாடு இல்லாதபடி குழுக்களின் குழு ஈழத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது  அதனால்தான் அவர்கள் மீளெழ முடியாமல் போனது.

புலிகளை  அழிப்பது அவ்வளவு எளிதானது  அல்ல. அது  இந்தியாவாலோ சிங்களத்தாலோ முடியாத காரியம்.  புலிகள் எதிரிகளைவிட மிகச்சிக்கலான அமைப்பு   ஒரு உலக வலைப்பின்னலை உடைக்க இன்னொரு உலக வலைப்பின்னலால் மட்டுமே  முடியும்.   முடிவில் ஒரு பெரிய உலக நாடுகளின் கூட்டு சதியால் உருவாக்கிய வலைப்பின்னலே  புலிகளை அழித்தது.

புலிகளின் ஒட்டுமொத்த பெருந்திட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. அதை நடைமுறைப் படுத்துவதில்  சிலதவறுகள் ஏற்பட்டிருக்கலாம், அதற்காக அவர்களின் பெருந்திட்டமே தவறு என்பது ஆதாரமற்றது. இவ்வுலகில் நாம் உறுதியாக வெல்வதற்கென்று எந்த திட்டத்தையும் நம்மால் தீட்டமுடியாது. நமது வெற்றி வாய்ப்புகளைக் கூட்டுவதற்கு ஒட்டுமொத்தப் பார்வை கொண்டு பல்வேறு அமைப்புகளை உருவாக்கி பரிணமித்துக்கொண்டே செல்லவேண்டும். வாய்ப்பு அமையும் பொழுது வெற்றிபெறுவோம். அது எப்பொழுது அமையும், எப்படி அமையும் என்று கணிக்க முடியாது. நாம் எதிர்காலத்தை நம்பிக்கயுடனே அணுகமுடியும். புலிகள் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன் அணுகினார்கள். வெற்றிக்கான முழுப்பாதை தெரிந்தால்தான் செயல்படுவேன் என்றால். பிரபாகரன் ஒன்றைத் துப்பாக்கியைத் தூக்கியே இருக்கமுடியாது. நாம் முடிந்த அளவு நமது செயல்பாடுகளை அறிவுப்பூர்வமாக முடுக்கி நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.  இதுதான் பிரபாகாரனின் பெருந்திட்டம்.

One thought on “பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s